search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி

    தூத்துக்குடியில் 36 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை- கலெக்டர் தகவல்

    தூத்துக்குடி மாவட்டத்தில் 36 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல், வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குசாவடிகளை பிரிக்கவும், இடமாற்றங்கள் செய்ய வேண்டிய வாக்குச்சாவடிகள், பள்ளி கட்டிடங்களை மாற்றி அமைக்க வேண்டிய வாக்குச்சாவடிகள், கட்டிடத்தின் பெயர்களை மாற்றி அமைக்க வேண்டிய வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி 1500-க்கும் அதிகமாக வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு புதிய வாக்குசாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குசாவடியும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குசாவடியும், விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குசாவடியும் ஆக மொத்தம் 6 புதிய வாக்குசாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

    மேலும் 36 வாக்குசாவடிகள் இடமாற்றமும், 26 வாக்குசாவடிகள் பெயர் மாற்றமும் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து கட்சி பிரமுகர்களும் ஆலோசித்து தங்களது கருத்துகளை ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக ஏதும் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதற்கான கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர்கள் விஜயா (கோவில்பட்டி) , தனப்ரியா (திருச்செந்தூர்) , தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு மற்றும் அனைத்து தாசில்தார்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த சந்தனம், தி.மு.க. கிருபாகரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×