search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட குழந்தையை படத்தில் காணலாம்.
    X
    மீட்கப்பட்ட குழந்தையை படத்தில் காணலாம்.

    குப்பைத்தொட்டி அருகே வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

    கோவையில் குப்பைத்தொட்டி அருகே வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டு அந்த குழந்தை யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையை அடுத்த சிங்காநல்லூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் இளையராஜா, செந்தில்குமார் ஆகியோர் நேற்று கொரோனா தடுப்பு வேனில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். அவர்கள் சிங்காநல்லூர் பஸ் நிலைய பின்புறம் வாகனத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள குப்பைத்தொட்டி அருகே ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது, பிறந்து 5 நாட்கள் ஆன பெண் குழந்தை ஒன்று கிடந்தது.

    இதையடுத்து அவர்கள், குழந்தையை மீட்டு அங்குள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெண்களிடம் குழந்தையை காட்டி விசாரித்தனர். ஆனால் குழந்தையை பற்றிய விவரம் யாருக்கும் தெரியவில்லை. எனவே சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அந்த பச்சிளம் குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டி அருகே போட்டது யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரில் இருந்து பஸ்சில் வந்தவர்கள் குழந்தையை போட்டு விட்டு சென்றார்களா? என்பது தெரிய வில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    Next Story
    ×