search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சை மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம் அபராதம் வசூல்

    தஞ்சை மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் அதிகாரியை அவதூறாக பேசியவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது சுகாதார சட்ட விதிகளை மீறுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்க 9 தாலுகாக்களிலும் 18 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும்படைகள் வணிக நிறுவனங்கள், பொது இடங்கள், பஸ்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    முக கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருத்தல், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களில் ஆய்வுசெய்து அபராதம் வசூலித்தனர்.

    அதன்படி கடந்த 7-ந் தேதி வரை பொதுசுகாதாரத்துறை மூலம் 4 ஆயிரத்து 762 பேரிடம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்து 200-ம், போலீஸ் மூலம் 20 ஆயிரத்து 649 பேரிடம் ரூ.41 லட்சத்து 39 ஆயிரத்து 700-ம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் 1,865 பேரிடம் ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 100-ம், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 1,323 பேரிடம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 100-ம் ஆக மொத்தம் 28 ஆயிரத்து 599 பேரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 3 ஆயிரத்து 100 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ஒரத்தநாடு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் பைரோஜாபேகம் கடந்த 7-ந்தேதி ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்கள் முக கவசம் அணியாமல் வந்ததால் நிறுத்தி அபராதம் செலுத்துமாறு கூறி உள்ளார்.

    அதற்கு அதில் வந்த ஒருவர் உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது என கோபத்தோடு பேசியவாறு, அந்த இடத்தை விட்டு செல்ல முயற்சித்துள்ளார். இதையடுத்து பொது இடத்தில் அரசு ஊழியரை அவதூறாக பேசியதற்காகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காததற்காகவும் ஒரத்தநாடு தாலுகா பொன்னாப்பூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்த அன்பரசன் மகன் சரவணன் மீது ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×