search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி - நெகமத்தை சேர்ந்தவர் கைது

    திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த நெகமத்தை சேர்ந்த வைரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அம்மாபாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் அழகர். இவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் குறை தீர்ப்பு நாளில் புகார் மனு கொடுத்தார். அதில் அம்மாபாளையம் பத்மாவதி நகரில் வசித்த கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், அவரிடம் அம்மாபாளையம், திலகர் நகர், தண்ணீர்பந்தல், அனுப்பர்பாளையம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சீட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர். இதில் அழகர் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 500 சீட்டுக்கு கட்டி இருந்ததாகவும், அதுபோல அப்பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் கோபால்சாமியிடம் பணம் கட்டி இருந்ததாகவும், ரூ.25 லட்சத்துடன் கோபால்சாமி தலைமறைவாகி விட்டார் என்றும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கோபால்சாமி அரசு அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, மளிகை பொருட்கள் பண்டு சீட்டு நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் கோபால்சாமியை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    கோபால்சாமியின் செல்போன் அழைப்புகள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை தீவிரமாக ஆராய்ந்து தேடுதல் வேட்டையில் தனிப்படையினர் ஈடுபட்டனர். இது ஒருபுறமிருக்க, கோபால்சாமியின் சகோதரர் கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் நிலையத்தில் கோபால்சாமி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் காணாமல் போய்விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் அவர்களும் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

    மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று காலை திருப்பூர் குமார் நகரில் வைத்து கோபால்சாமி (வயது 59) கைது செய்யப்பட்டார்.

    அவரிடமிருந்து நில ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×