search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2,612 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- 17 பேர் கைது

    திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2,612 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து 17 பேரை கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 1,135 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 7 லட்சத்து 62 ஆயிரத்து 608 குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகிறார்கள். இதன் மூலமாக இதுவரை 22 லட்சத்து 15 ஆயிரத்து 650 பேர் பலன் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் பொது வினியோகத் திட்ட அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சமூக விரோதிகள் சிலர் பொதுமக்களிடமிருந்து பெற்று அதிக லாபம் பெறும் வகையில் வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதாக புகார்கள் பெறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கலெக்டரின் அறிவுரையின்படி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு ரோந்து பணியை மேற்கொண்டனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 2,612 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஆகஸ்டு மாதத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 1,091 குறைபாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்காரர்கள் மீது ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 825 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×