search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்
    X
    தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்

    100 ஏக்கர் பாசனம் வசதி பெறும் வாய்க்காலை காணவில்லை- கலெக்டரிடம் சிவசேனா கட்சி புகார்

    100 ஏக்கர் பாசனம் வசதி பெறக்கூடிய வாய்க்காலை காணவில்லை என கலெக்டர் கோவிந்தராவிடம் சிவசேனா கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு சிவசேனா கட்சியின் மாநில துணைத் தலைவரும், காவிபுலிப்படை நிறுவன தலைவருமான புலவஞ்சி போஸ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் கோவிந்தராவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் தென்னை சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. நெல்லை எப்படி அரசே கொள்முதல் செய்கிறதோ? அதேபோல் தேங்காயையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

    மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி கிராமத்தில் அண்டிகொல்லை வாய்க்காலில் தண்ணீர் சென்றால் அதன் மூலம் 100 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும் பிரதான குளம், சுண்டிகுளத்திற்கு இந்த வாய்க்கால் மூலம் தான் தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால் இந்த வாய்க்காலை இப்போது காணவில்லை. தனி நபர்கள், வாய்க்கால் இருந்த இடம் கூட தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதனால் விவசாய பணிகள் செய்ய முடியவில்லை. ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதிக்குழு மானியம் கடந்த 6 மாதங்களாக வராத காரணத்தினால் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    ஊராட்சியில் உள்ள 14-வது மற்றும் 15-வது நிதிக்குழு மானியம் போன்ற நிதிகளை அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த தொகையில் இருந்து பணிகளை செய்யாமல் வேறு பணிகளுக்கு அரசு மாற்றக்கூடாது. உள்ளாட்சி அதிகாரங்களை பறிக்காமல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×