search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தென்தாமரைகுளம் பெரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 17 பவுன் நகைகள் கொள்ளை

    பெரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டம் தென்தா மரைகுளத்தில் பழமையான பெரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மட்டும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதில் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    திங்கட்கிழமையான கடந்த 14-ந்தேதியும் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அன்றைய தினம் பூஜைகள் முடிந்து இரவில் கோவில் பூட்டப்பட்டது. வாரத்தின் மற்ற நாட்களில் கோவில் பூட்டப்பட்டிருந்தாலும், தினமும் ஏராளமானோர் கோவிலின் வெளியே நின்றபடி சாமி கும்பிட்டு விட்டு செல்வார்.

    அதேபோல் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த கோபிகண்ணன் என்பவர் சாமி கும்பிட கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் ஒரு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கோவிலின் பூசாரி பாலனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து கோவில் பூசாரி, ஊர் தலைவர் துரைலிங்கம் மற்றும் பொது மக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது அம்மனின் கழுத்தில் அணி விக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க செயின், 2 பவுன் நெற்றிப் பொட்டு உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    அதேபோல் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி காப்பு மற்றும் வெள்ளி தட்டு என 1 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருட்களும் திருட்டு போயிருந்தன. அது மட்டுமின்றி கோவிலின் உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது.

    யாரோ மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து, அம்மனுக்கு அணி விக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளைபோன தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் எனவும், கோவிலின் உண்டியலில் ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் காணிக்கை பணம் இருந்திருக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஒரு செல்போன் கிடந்தது. அது கொள்ளையர்கள் பயன் படுத்திய செல் போனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனை வைத்து கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    இந்த கொள்ளை தொடர்பாக தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த கோவிலில் கண்காணிப்பு காமிரா இல்லை. ஆனால் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு இருக்கிறது.

    அதில், கோவிலில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களின் படம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

    பெரியம்மன் கோவிலில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் தென்தாமரைகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×