search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    கடைகளை இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்- அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை

    சென்னையில் மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் கடந்த 1-ந்தேதி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால அளவு வியாபாரத்துக்கு போதுமானதாக இல்லை என்றும், இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ராஜ்குமார் (கிரேஸ் சூப்பர் மார்க்கெட்):-

    இரவு 8 மணிக்குள் கடைகளை மூடவேண்டி இருப்பதால் பெரும்பாலான வியாபாரம் பாதிக்கின்றது. வேலைக்கு செல்பவர்கள் இரவு 7, 8 மணிக்கு பிறகு தான் கடைகளுக்கு வருவார்கள்.

    இந்த நேரத்தில் கடைகள் மூடுவதால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வியாபாரத்துக்கு மாறுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே பொருட்களை ஆன்லைன் வழியாக ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள்.

    இதன்காரணமாக சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு 25 சதவீதம் வியாபாரம் குறைந்துவிட்டது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாங்கும் சக்தி குறைந்துள்ளது. மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.

    எனவே அனைத்து கடைகளையும் காலை 6 மணி முதல் இரவு 9 அல்லது 10 மணி வரை திறக்க அனுமதித்தால் வியாபாரம் பாதிக்காமல் நடைபெறும்.

    பொன்ராஜ் (மளிகை வியாபாரம்):-

    கொரோனா பாதிப்பின் காரணமாக தொழில், வேலை இழந்து பலரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகளில் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டது.

    கொரோனாவுக்கு முன்பு இருந்த வியாபாரம் இப்போது இல்லை. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. கடைகளின் நேரத்தை அதிகரித்தால் மக்கள் எளிதாக வந்து பொருட்களை வாங்கிச் செல்ல முடியும். இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.

    பீட்டர் (பழ ஜூஸ்கடை):-

    பகல் நேரத்தில் நடக்கிற வியாபாரத்தை விட மாலை 6 மணிக்கு பிறகு தான் அதிக வியாபாரம் நடைபெறும். வேலைக்கு செல்பவர்கள் இரவு 8 மணிக்கு பிறகுதான் இங்கு வருவார்கள்.

    ஆனால் கடையை இரவு 8 மணிக்கே மூடிவிடுவதால் வியாபாரம் பாதிக்கிறது. எனவே இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவேண்டும்.

    சுரேஷ் (காய்கறி கடை):-

    காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை காய்கறி கடைகள் செயல்படுகிறது. இது அழுகும் பொருள் என்பதால் சேமித்து வைக்க இயலாது. முன்பு இரவு 10 மணி வரை வியாபாரம் செய்ததால் காய்கறிகள் அதிகம் விற்றுத்தீர்ந்து விடும். ஆனால் இப்போது சீக்கிரமே கடைகள் மூடப்படுவதால் காய்கறிகள் அதிகம் அழுகி சேதம் ஆகிறது. காய்கறிகள் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் இரவு 10 மணி வரை அனுமதிக்கலாம்.

    இஸ்ரவேல் (மளிகை கடை):-

    பொதுவாக இந்த கால கட்டத்தில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பணம் இல்லாததால் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

    அதனால் அனைத்து கடைகளையும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்.

    அன்னை மாரியப்பன் (மளிகை கடை):-

    அதிக ஊழியர்களை வைத்து கடைகளை நடத்துபவர்களுக்கு இந்த கால அவகாசம் போதாது. இரவு 10 மணி வரை கடைகளை திறந்து இருந்தால் தான் அவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும்.

    எனவே அனைத்து கடைகளையும் அரசு இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும்.
    Next Story
    ×