search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேற்று சனிக்கிழமை என்றாலும் மதுரை கலெக்டர் அலுவலகம் வழக்கம்போல் செயல்பட்டது.
    X
    நேற்று சனிக்கிழமை என்றாலும் மதுரை கலெக்டர் அலுவலகம் வழக்கம்போல் செயல்பட்டது.

    அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும்- தமிழக அரசு உத்தரவு

    வரும் டிசம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசுப் பணிகளில் ஏற்பட்ட தாக்கங்களை தவிர்ப்பதற்காக, அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று கடந்த மே 3-ந் தேதி உத்தரவிடப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மே 18-ந் தேதியில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்க அனுமதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

    அந்த வகையில் சுழற்சி முறையில் பணியாளர்கள் அனைவரும் வாரத்துக்கு 6 நாட்களும் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    ஏற்கனவே பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை ஈடுகட்டும் வகையிலும், சுழற்சி முறைப்படி பணியாற்றும்போது ஏற்கனவே இருந்த இயல்பான பணி நேரம் குறைவதாலும், சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணி நாட்களாக அரசு முறைப்படுத்தி இருந்தது.

    இந்தநிலையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி அறிவித்தார்.

    அதன்படி, 100 சதவீத ஊழியர்களும் பணிக்கு வந்தாலும், வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை சனிக்கிழமைகளிலும் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று அரசு ஆகஸ்டு 30-ந்தேதி உத்தரவிட்டது.

    மேலும், 100 சதவீத பணியாளரும் வருவதால், சுழற்சி முறையை அரசு ரத்து செய்வதோடு, 5-ந் தேதியில் இருந்து (நேற்று) இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. தேக்கமடைந்துள்ள அரசுப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மற்ற அனைத்து பிரிவு அரசுப் பணியாளர்களுக்கும் மாவட்ட கலெக்டர்கள் சுற்றறிக்கை அனுப்பினர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட வேண்டும் என்றும், ஏற்கனவே இழந்த வேலை நேரத்தை ஈடு செய்வதற்காக சனிக்கிழமை உள்பட 6 நாட்களும் வேலை நாட்களாக கொண்டு வரப்படும் என்று கடந்த மே 15-ந் தேதி அரசு உத்தரவிட்டு இருந்தது.

    கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி அரசு மற்றொரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களும் முறையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட வேண்டும்;

    நோய்த்தொற்று உள்ளவர்கள் அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்; 5-ந் தேதியில் (நேற்று) இருந்து டிசம்பர் 31-ந் தேதி வரை சனிக்கிழமை உள்பட வாரத்தின் 6 நாட்களையும் வேலை நாட்களாக அலுவலக நேரத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த காலகட்டத்தில் அரசு அலுவலகங்களில் இரண்டாம் சனிக்கிழமையில் மட்டும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிக்காக விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சனிக்கிழமைகளில் பணியாற்றும் நிலை 1992-ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டதோடு, 5 பணி நாட்களில் காலை 10 முதல் மாலை 5.45 வரை அலுவலகம் இயங்கும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×