search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வடபழனியில் காரில் கஞ்சா கடத்திய வாலிபரை விரட்டி பிடித்த போலீசார்

    சென்னை வடபழனியில் சினிமா பாணியில் காரில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
    போரூர்:

    வடபழனியில் காரில் கஞ்சா பொட்டலங்கள் கைமாறுவதாக தெற்கு கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் தினகரனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி நேற்று மாலை வடபழனி 100அடி சாலையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தனியார் நட்சத்திர ஓட்டல் அருகே காரில் வந்த வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை வேறொரு நபருக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றார்.

    இதனை கண்ட போலீசார் மற்றொரு காரில் பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். காசி தியேட்டர் மேம்பாலம் அருகே முன்னால் சென்ற காரை போலீசார் மடக்கி நிறுத்தினர்.

    காரில் சோதனை செய்த போது அதில் 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கார் “சேசிங்” சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காரில் இருந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவன்  அரும்பாக்கம் பாண்டியன் தெருவைச் சேர்ந்த முத்து பிரகாஷ்(25) என்பதும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த சுமன்(38) என்பவரிடம் கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சுமன் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்து இருந்த மேலும் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பிரகாஷ், சுமன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எங்கிருந்து கஞ்சா வாங்கி வருகிறார்கள்? அவை யார்? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து கைதாக இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×