search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்
    X
    அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்- அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி, மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் முறைகள் குறித்தும், ஊரடங்கினால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்துத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை அதிகாரிகள் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழுக்கள் மூலம் கொரோனா நோய் தொற்று கண்டறியும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அதோடு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரை நாள்தோறும் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அவரவர் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்பட வேண்டும். வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×