search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் - கலெக்டரிடம் ஜாக்டோ-ஜியோ மனு

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் அனைவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடைசிவரை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்பினர்.

    அதனை தொடர்ந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

    கொரோனா பரவலை அரசுடன் சேர்ந்து தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணியை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது அரசுப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துமுருகன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×