search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தேரிக்கரை பகுதியில் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை
    X
    சித்தேரிக்கரை பகுதியில் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை

    விழுப்புரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

    விழுப்புரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சித்தேரிக்கரை, ஆடல் நகர், மஞ்சு நகர், வழுதரெட்டி காலனி ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகளை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது வழுதரெட்டி காலனியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முக கவசம் அணியாமல் இருந்ததை பார்த்த கலெக்டர், அந்த பணியாளர்களை அழைத்து கட்டாயம் முக கவசம் அணிந்துகொண்டுதான் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் கட்டிட உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து நோய் தொற்று பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒலிப்பெருக்கி வாகனத்தின் மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான அறிகுறிகள், நோய் தடுப்பு முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் கொரோனா நோய் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையினை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் தினமும் காலை, மாலை வேளைகளில் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியே எங்கும் செல்லாதவாறு கண்காணிப்பதோடு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வீடு தேடிச்சென்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×