search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தக்கலையில் புதுமண தம்பதி உள்பட 9 பேருக்கு கொரோனா

    தக்கலையில் புதுமண தம்பதி உள்பட 9 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேக்காமண்டபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடப்பட்டது.
    பத்மநாபபுரம்:

    தக்கலை அருகே சரல்விளையை சேர்ந்த 20 வயது வாலிபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது தாய், தந்தை, தங்கை மற்றும் உறவினர் என 4 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வாலிபர் சென்ற இடங்கள் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து புதுமண தம்பதிகள் மற்றும் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவு நேற்று வெளியான நிலையில் 32 வயது மணமகன், 22 வயது மணமகள், 35 வயது உறவினர் பெண், 35 வயது பெண், அவரது 7 வயது மகன், மற்றும் 2 சிறுவர்கள் என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தக்கலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டுக்கு ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நேற்று 40 வயதுடைய மேலும் ஒரு ஏட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் நட்டாலம் பகுதியை சேர்ந்தவர். இதுபோல், அரசன்விளையை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேக்காமண்டபத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கூட்டுறவு வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. சுகாதாரதுறை பணியாளர்கள் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவட்டார் பஸ் நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு வேலை பார்த்து வரும் 33 வயதுடைய ஊழியருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. சுகாதாரதுறை ஊழியர்கள் வங்கியில் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியில் ஈடுபட்டனர்.

    முட்டம் குருந்தன்கோடு வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணவாளக்குறிச்சி மார்க்கெட்டில் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என 93 பேரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். அதில் முட்டம் ஆரம்ப சுகாதார ஆய்வாளரான வெட்டூணிமடத்தை சேர்ந்த 54 வயது ஆண், மீன் விற்பனை செய்யும் பெண் உள்பட 8 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. உடனே, அவர்கள் 8 பேரும் ஆசாரிபள்ளம் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். மேலும், மணவாளக்குறிச்சி சந்திப்பில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 44 வயது நர்சுக்கும் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும், முட்டம் ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சளி மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 
    Next Story
    ×