search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரபங்கா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதை படத்தில் காணலாம்.
    X
    சரபங்கா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதை படத்தில் காணலாம்.

    காடையாம்பட்டியில் 125 மி.மீ. மழை பதிவு- சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    காடையாம்பட்டியில் 125 மி.மீ. மழை பதிவானது. பலத்த மழையால் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    ஓமலூர்:

    ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையினால், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அதன்பிறகு நேற்று காலை 7 மணிவரை மழை தூறிக்கொண்டே இருந்தது.

    இந்த பலத்த மழையால் ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் டேனிஷ்பேட்டை பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாலத்தில் மழைநீர் சுமார் 2 அடிக்கு மேல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். ஆழம் தெரியாமல் சென்ற 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் தண்ணீரில் சிக்கி நின்றன. இதையடுத்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதனையடுத்து நேற்று காலை 11 மணிக்கு மேல்தான் சுரங்க பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சென்றன.

    ஏற்காட்டில் நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. மழையால் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதுபற்றி ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் காடையாம்பட்டியில் அதிகபட்சமாக 125 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    ஏற்காடு-84, ஆணைமடுவு -63, கரிய கோவில்-50, தம்மம்பட்டி-40, பெத்தநாயக்கன்பாளையம்- 20, ஓமலூர்- 19, ஆத்தூர்- 17.8, மேட்டூர் -16.6, எடப்பாடி-16, சேலம்- 13.8, சங்ககிரி-13.2, வீரகனூர்-7, வாழப்பாடி-2.
    Next Story
    ×