search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை - எல்லை பிரச்சினையால் 2 நாட்களாக உடலை எடுக்காத அவலம்

    கல்வராயன்மலையில் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். எல்லை பிரச்சினையால் 2 நாட்களாக உடலை எடுக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த மலை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ளது.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும், தர்மபுரி மாவட்டத்துக்கும் இடையே உள்ள கல்வராயன்மலை வனப்பகுதியில் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் மீது பெரிய கல் ஒன்று இருந்தது. மேலும் உடல் அழுகிய நிலையிலும் காணப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் போலீசாரும், தர்மபுரி மாவட்டம் தோட்டம்பாடி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை பார்வையிட்டனர். வாலிபரின் உடல் மீது பெரிய கல் இருந்ததால், அவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி தெரியவில்லை.

    இந்த கொலை சம்பவம் பற்றி யார் விசாரணை நடத்துவது என்பது குறித்து 2 போலீஸ் நிலைய போலீஸ்காரர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடம் கரியாலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்று தோட்டம்பாடி போலீசாரும், இது தோட்டம்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்று கரியாலூர் போலீசாரும் மாறி, மாறி கூறினர். இது தொடர்பாக இரு போலீஸ் நிலைய போலீஸ்காரர்களிடையே பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் அதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த எல்லை பிரச்சினை தொடர்பாக இரு மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி இருமாவட்டத்தை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் சென்று எல்லையை அளந்தனர். இந்த பணி இரவு 8 மணி வரை நடந்தது. இருப்பினும் எல்லை அளவீடு பணி முடிவடையவில்லை.

    இந்த எல்லை பிரச்சினையால் கொலையுண்ட வாலிபரின் உடல், கடந்த 2 நாட்களாக எடுக்கப்படாமல் காட்டிலேயே கிடக்கிறது. அவரது உடல் பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை. இதனால் அந்த உடல் மேலும் அழுகி, துர்நாற்றம் வீசுகிறது. இந்த அவல நிலையை போக்க முதலில் படுகொலை செய்யப்பட்டவரின் உடலை எதாவது ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×