search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருந்து கழிவுகளுடன் வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடிப்பு
    X
    மருந்து கழிவுகளுடன் வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடிப்பு

    பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு மருந்து கழிவுகளுடன் வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடிப்பு

    பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு மருந்து கழிவுகளுடன் வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
    குன்னம்:

    பெரம்பலூர் அருகே நெடுவாசல் பிரிவு ரோட்டில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு மறுசுழற்சிக்காக குப்பைகள் எரியூட்டப்படுகிறது. இதில் வரும் கரித்துகள், கருகிய பொருட்கள் ஆகியவற்றோடு பெரம்பலூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து வரும் கழிவுகள், உடைந்த பாட்டில் என அனைத்தும் பெரம்பலூர் நகராட்சி லாரிகள் மூலம் கொட்டப்படுகிறது.

    அப்பகுதியில் கொட்டப்படும் மருந்து கழிவுகள் மழையினால் கரைந்து மண்ணுக்குள் இறங்கி அருகில் உள்ள குடிநீர் கிணறுகள் விஷமாக மாறி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எரியூட்டப்பட்ட மருந்து கழிவுகளின் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட நெடுவாசல் கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை நகராட்சி குப்பை கிடங்கிற்கு வந்து அங்கு குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த நகராட்சி உதவி பொறியாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், பன்னீர்செல்வம் ஆகியோர் நெடுவாசல் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டதால் லாரியை கிராம மக்கள் விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர்.
    Next Story
    ×