search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    போலீஸ்காரருக்கு கொரோனா- தென்காசி மாவட்டத்தில் 2 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன

    போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தென்காசி மாவட்டத்தில் 2 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன.
    தென்காசி:

    கொரோனா நோய் தொற்று தற்போது பல இடங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனை கண்டறிய பொதுமக்களுக்கு பரிசோதனைகள் நடைபெறுகின்றன. யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டால் அவர் எங்கெல்லாம் சென்றார் என்பதை விசாரித்து அங்கு இருப்பவர்களுக்கு சோதனை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் ஒருவர் மாற்றுப் பணிக்காக புளியரை போலீஸ் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். அந்தந்த போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் வேறு இடங்களில் பணியாற்றினால் அவர்கள் பணியாற்றும் போலீஸ் நிலையத்திற்கு வந்து பதிவு செய்ய வேண்டுமென்ற உயர் அதிகாரி உத்தரவின்பேரில் அந்த போலீஸ்காரர் நேற்று குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து பதிவு செய்தார். அதற்கு முன்னதாக அவர் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இந்த பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது நேற்று காலை தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் புளியரையில் பணியாற்றியதாலும் குற்றாலத்திற்கு வந்ததாலும் 2 போலீஸ் நிலையங்களும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. 2 போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதேபோல் தென்காசி யானை பாலம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கடை அடைக்கப்பட்டது.

    விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி யமுனை தெருவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே இந்த மருத்துவமனையில் இரண்டு செவிலியருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சிவந்திபுரம் கிராம நிர்வாக அதிகாரி குருகுலராமன், ஊராட்சி செயலர் வேலு ஆகியோர் அந்த தெருவுக்கு வெளி நபர்கள் செல்ல தடை விதித்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர். அவரது வீட்டில் உள்ளவர்களை தனிமைப்படுத்தப்பட்டனர்.

    வடக்கன்குளம் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ஆலோசகருக்கு கொரோனா தோற்று உறுதியானதால் மூன்று நாட்களுக்கு மருத்துவமனை மூடுவதற்கு நெல்லை சுகாதார துறை துணை இயக்குனர் வரதராஜன் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

    களக்காட்டில் சித்த மருத்துவருக்கும், ஜவுளிக்கடை ஊழியர், நகைக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்ட ஜவுளிக்கடை ஊழியர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள், சித்தா மருத்துவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இன்று ஒரே நாளில் ஏற்கனவே தொற்று பாதித்த ஜவுளி கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் 6 பேருக்கும், அந்த பகுதியில் கடை நடத்தி வரும் 2 வியாபாரிகள், ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்ட சித்த மருத்துவரின் உறவினர்கள் 2 பேர் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து களக்காடு பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை அடைக்க சுகாதார துறையினர் உத்தரவிட்டனர். இதனை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டது.

    கடையநல்லூர் பெரிய தெரு பகுதியில் குடியிருக்கும் முதியவர் சிறுநீரகம், இருதய பரிசோதனைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நள்ளிரவு திடீரென மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடையநல்லூர் நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் குமார் சிங், சுகாதார அலுவலர் நாராயணன், கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கடையநல்லூர் பெரிய தெரு பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சுகாதார பணியாளர்கள் மூலம் இந்த பகுதி முழுவதும் காய்ச்சல், சளி உள்ளதா என கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது முதல் கட்டமாக அந்த வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×