search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    நாமக்கல்லில் பட்டப்பகலில் ஆசிரியையிடம் 9½ பவுன் நகைபறிப்பு

    நாமக்கல்லில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து அரசு பள்ளி ஆசிரியையிடம் 9½ பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் பொன்விழா நகரை சேர்ந்தவர் வில்லவன். இவரது மனைவி கமலாதேவி (வயது 48). இவர் பொட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணி அளவில் மாருதிநகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். பின்னர் தனது வீட்டிற்கு சக ஆசிரியை ஒருவருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    வீட்டின் அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி திடீரென கமலாதேவி கழுத்தில் அணிந்து இருந்த 9½ பவுன் நகையை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலாதேவி திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் பொதுமக்கள் வருவதற்குள் அந்த மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டான்.

    இது குறித்து கமலாதேவி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டு, தப்பியோடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×