search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டியில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ள வாழைத்தார்கள்
    X
    மண்டியில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ள வாழைத்தார்கள்

    கோவையில் வாழைத்தார் விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

    கோவையில் வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்னை, பாக்கு, சின்னவெங்காயம், மஞ்சள், வாழை உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது. இதில் தொண்டாமுத்தூர், பேரூர், காரமடை, துடியலூர், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிகமாக பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வாழைத்தார் மண்டிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டு உள்ளன. மேலும் கோவில்களில் வழிபாட்டிற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாழைப்பழ தேவையும் குறைந்து உள்ளது. தற்போது ஆர்.எஸ்.புரம் மண்டிக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்து உள்ள நிலையில் தேவை குறைந்து உள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வாழைமண்டி வியாபாரிகள் கூறியதாவது:- கோவை ஆர்.எஸ்.புரம் மண்டிக்கு வழக்கமாக நாள் ஒன்றுக்கு 8 டன் முதல் 10 டன் வாழைத்தார்கள் வரும். இதில் 4 டன் வாழைத்தார்கள் சென்னைக்கு அனுப்பப்படும். தற்போது சென்னையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இங்கிருந்து வாழைத்தார்கள் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த வாரம் முதல் நாள் ஒன்றுக்கு 15 டன் வரை வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகின்றன. வரத்து அதிகரித்து உள்ள நிலையில் தேவையின் அளவு குறைந்து உள்ளது. சென்னைக்கு ஏற்றுமதி தடைபட்டுள்ளதாலும், திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளதுடன், கோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை போன்ற காரணங்களால் வாழைப்பழ தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ செவ்வாழை ரூ.45-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.40-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.14-க்கு விற்கப்பட்ட பச்சை வாழைப்பழம் (மோரீஸ்) ரூ.10-க்கும், 40-க்கு விற்கப்பட்ட நேந்திரம் கிலோ ரூ.32 முதல் 34-க்கும் விலை போனது. ரஸ்தாளி ரூ.27-க்கும் விற்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். உற்பத்தி செலவு கூட கிடைப்பது இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×