search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி இருந்ததை காணலாம்
    X
    சேலம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி இருந்ததை காணலாம்

    சேலம் மாவட்டத்தில் 6ம் கட்ட ஊரடங்கு- பஸ்கள் ஓடாததால் வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்

    சேலம் மாவட்டத்தில் 6-ம் கட்ட ஊரடங்கையொட்டி, பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் 6-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வருகிற 15-ந் தேதி வரை பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டத்தில் மொத்தம் 2,080 அரசு பஸ்கள் உள்ளன. இதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 1,040 அரசு பஸ்கள் நேற்று முன்தினம் வரை இயக்கப்பட்டு வந்தன. இதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே பஸ்களில் அமர அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், நேற்று முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் பஸ்கள் சேவை வருகிற 15-ந் தேதி வரை நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அனைத்து வழித்தடங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. இதனால் பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டன. அனைத்து அரசு பஸ்களும் அந்தந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    சேலம் மாநகரில் அனைத்து சாலைகளிலும் பஸ்கள் இயக்கப்படாமல் கார்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மட்டுமே சென்றதை காண முடிந்தது. இதேபோல் சேலம் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு வெளியிட்டவுடன் பொதுமக்கள் நலன் கருதி பஸ் போக்குவரத்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×