search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி நகர் பெரியகுளம் சாலையில் சென்ற வாகனங்கள்
    X
    தேனி நகர் பெரியகுளம் சாலையில் சென்ற வாகனங்கள்

    தேனியில் சமூக பரவலாக மாறும் அபாயம்- கொரோனா அச்சமின்றி உலா வரும் மக்கள்

    தேனியில் கொரோனா அச்சமின்றி மக்கள் சாலைகளில் உலா வருவதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 650-ஐ தாண்டி உள்ளது. மருத்துவமனைகளில் இடமின்றி கல்லூரிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேனி, பெரியகுளம், கம்பம், போடி, சின்னமனூர், கூடலூர் ஆகிய நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இங்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இருப்பினும் கொரோனா குறித்த அச்சமின்றி மக்கள் உலா வருவதை பார்க்க முடிகிறது. காலை மற்றும் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு தேனியில் மக்கள் வலம் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், கார்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்பது பெயரளவில் தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டீக்கடைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சைக்கிளில் டீ விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனால், டீக்கடைகளை காட்டிலும் இதுபோன்ற நடமாடும் சைக்கிள் டீக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதேபோல் ஆண்டிப்பட்டி பகுதிகளில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் இன்றி கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதே நிலைமை நீடித்தால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலைக்கு சென்று விடும் அபாயம் உள்ளது.

    எனவே, கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொள்ளவும், தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    Next Story
    ×