search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

    முல்லைப்பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
    தேனி:

    தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு, கடந்த 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.

    தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், மூவர் குழுவின் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர்.

    இதற்காக துணை கண்காணிப்பு குழுவின் தலைவரான மத்திய நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரள மாநில பிரதிநிதிகளான கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் தேக்கடியில் இருந்து நேற்று காலையில் அணைக்கு புறப்பட்டு சென்றனர். செயற்பொறியாளர் சாம்இர்வின் தேக்கடியில் இருந்து படகு மூலமும், மற்ற அனைவரும் வல்லக்கடவு வனப்பாதை வழியாக ஜீப்களிலும் அணைக்கு சென்றனர். சுமார் 2 மணி நேரம் அணையில் ஆய்வு செய்தனர். பேபி அணை, முல்லைப்பெரியாறு அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அணையில் உள்ள 13 மதகுகளில் 3, 5, 6 ஆகிய மதகுகளை இயக்கி சோதித்தனர். அவை நல்ல முறையில் இயங்கின. ஆய்வை முடித்துக் கொண்டு குழுவினர் தேக்கடிக்கு திரும்பினர். வழக்கமாக, அணையை பார்வையிட்ட பிறகு ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக ஆய்வுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை மூவர் குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று துணை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×