search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று

    குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தினமும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வெளிமாநிலம், வெளிநாடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களால் தற்போது தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    விளவங்கோடு அருகில் உள்ள வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த 59 வயது ஆண், அவருடைய 57 வயது மனைவி மற்றும் 55 வயது பெண் ஆகியோர் வெளி மாவட்ட பகுதியில் இருந்து ரெயில் மூலம் நாகர்கோவிலுக்கு வந்தனர். இவர்கள் 3 பேருக்கும் சளி மாதிரிகளை சேகரித்து தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

    ஏற்கனவே கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பத்துகாணி பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த 42 வயது பெண், 18 வயது வாலிபர், 16 வயது சிறுமி ஆகியோருக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

    வெளி மாவட்ட பகுதியில் இருந்து அதங்கோடு நடையாத்துவிளை பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண், அவருடைய 45 வயது மனைவி ஆகியோருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண், வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். ரெயில் மூலம் குமரி வந்த நாகர்கோவில் அருகே வட்டக்கரையைச் சேர்ந்த 26 வயது ஆண், சூரங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த 30 வயது ஆண் ஆகியோருக்கும் சளி மாதிரி சேகரித்து தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களால் சளி மாதிரிகள் சேகரித்து தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

    இந்த 13 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. இதனால் அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று 2 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினர். எனவே தற்போது 74 பேர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய சொந்த ஊர் குமரி மாவட்டம் ஆகும். அவர், குமரி மாவட்டத்துக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இன்னொருவரும் விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து, அங்கிருந்து குமரிக்கு வந்தவருக்கும் கொரோனா தொற்று இருப்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. அவரையும் அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×