search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள்
    X
    பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள்

    பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 78 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்

    பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 78 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றதையொட்டி துறைமுக பகுதி படகுகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
    ராமேசுவரம்:

    கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் அனுமதியை தொடர்ந்து 78 நாட்களுக்கு பிறகு பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று காலை 7 மணிமுதல் 40 விசைப்படகுகளில் சுமார் 250-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதுடன் இந்த மீனவர்கள் அனைவரும் இன்று(திங்கட்கிழமை) காலை மீன்களுடன் கரை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றதையொட்டி துறைமுக பகுதி படகுகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    பாம்பன் தென் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் பாக்ஜலசந்தி கடலான வடக்கு கடல் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் வருகிற 13-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர். 
    Next Story
    ×