search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்குவங்க மாநில தொழிலாளர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் உணவு பொருட்களை வழங்கினார்
    X
    மேற்குவங்க மாநில தொழிலாளர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் உணவு பொருட்களை வழங்கினார்

    தர்மபுரியில் தங்கி பணிபுரிய 1,451 வடமாநில தொழிலாளர்கள் விருப்பம்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

    1,451 வடமாநில தொழிலாளர்கள் தர்மபுரி மாவட்டத்திலேயே தங்கி பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 266 பேர் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் நேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.

    அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த 2,600 தொழிலாளர்கள் நிரந்தரமாக தங்கி பணி செய்து வந்தனர். இவர்களில் 763 பேர் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் உத்தரபிரதேசம், அசாம், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 266 பேர் அரூரில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    வடமாநிலங்களை சேர்ந்த 1,451 தொழிலாளர்கள் தர்மபுரி மாவட்டத்திலேயே தொடர்ந்து தங்கி பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள வடமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர் பசுபதி, அரசு வக்கீல் பசுபதி, கூட்டுறவு சங்கத்தலைவர் மதிவாணன், அரூர் சர்க்கரை ஆலைத்தலைவர் விஸ்வநாதன், தாசில்தார்கள் செல்வராஜ், கற்பகவடிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×