search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்கள்
    X
    மீன்கள்

    சின்னமுட்டத்தில் முதல் நாளில் ரூ.2 கோடி மீன்கள் விற்பனை

    சின்னமுட்டம் மீனவர்கள் 73 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மாலை திரும்பிய மீனவர்களின் மீன்கள் ரக வாரியாக பிரிக்கப்பட்டு மொத்தம் ரூ.2 கோடிக்கு விற்பனை நடந்தது.
    கன்னியாகுமரி:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குமரி மாவட்ட மீனவர்கள் கடந்த மார்ச் 22-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கியதால் மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குச் செல்லாமல் இருந்தனர்.

    கொரோனா ஊரடங்கால் தடைக்காலத்திற்கு முன்பிருந்தே மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்ததால், மீன்பிடித்தடைக்காலத்தை 61 நாளில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மே 31-ந்தேதியுடன் தடை காலம் நிறைவடைந்தது.

    இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்ட மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் வழக்கமாக அங்கிருந்து செல்லக்கூடிய 350 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    வலைகளை சீரமைத்தல், டீசல் நிரப்புதல், கடலுக்கு செல்ல படகுகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் 73 நாட்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அனைவரும் ஒட்டுமொத்தமாக செல்லாமல் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்ததால், முதற்கட்டமாக 96 விசைப்படகுகள் மட்டும் நேற்று சென்றன. கடலுக்குள் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாததால், கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் மாலை முதல் கரைக்கு திரும்ப தொடங்கினர்.

    மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விசைப்படகுகள் கரைக்கு வந்தபடி இருந்தன. விளமீன், பாறை, வாவல், திருக்கை, நெடுவா, நவரை, நெய் மீன் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களுடன் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். நேற்று ஒரே நாளில் மீனவர்களுக்கு சுமார் 48 டன் மீன் கிடைத்தது.

    ஏலக்கூடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் விடிய விடிய விற்பனை நடந்தது. மீனவர்களும், மீன் வியாபாரிகளும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ரக வாரியாக மீன்கள் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ.2 கோடிக்கு மீன்கள் விற்பனை நடந்தது.

    2-வது நாளான இன்று சின்னமுட்டத்தில் இருந்து 113 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
    Next Story
    ×