search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் கடன் உதவி - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் 330 மகளிர் குழுக்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கடன் உதவி வழங்கி பேசியதாவது:-

    உலகத்தை அச்சுறுத்துகின்ற கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய- மாநில அரசுகள் விழிப்புணர்வுடன் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற ஒரு பேரிடரை நம் வாழ்வில் கேள்விபட்டது கூட இல்லை.

    தமிழ்நாடு அரசு தொடர்ந்து விலையில்லா அரிசியை வழங்கி வருகிறது. சுமார் 2 கோடியே 1 லட்சத்து 80 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் சிறப்பு நிவாரண தொகையும் வழங்கி, அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன.

    கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு காலத்தில் சுய உதவி குழுவினருக்கு குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் ஒரு குழுவுக்கு ரூ. 1 லட்சம் வரை கடன் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கான வட்டி 10.30 சதவீதம் ஆகும். 24 மாதங்கள் முதல் 30 மாதங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். முதல் 6 மாதங்கள் கடனுக்கான தவனையை செலுத்த வேண்டியதில்லை. முன் வைப்புத்தொகை, காப்புத் தொகை, சேவைக் கட்டணம், நடைமுறை கட்டணம் ஆகியவை வசூலிக்கப்பட மாட்டாது.

    தமிழ்நாட்டில் 69.28 லட்சம் உறுப்பினர்களை கொண்ட 4.67 லட்சம் குழுக்கள் உள்ளது. மதுரை மாவட்டத்தில் 1,10,060 உறுப்பினர்களை கொண்ட 8,658 குழுக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களின் மொத்த சேமிப்பு தொகை ரூ.8.921 கோடி ஆகும். மதுரை மாவட்டத்தில் 32.11 கோடியாகும்.

    தமிழ்நாட்டில் ஆதார நிதிபெற்ற குழுக்கள் 5.98 லட்சமாகும். மதுரை மாவட்டத்தில் 1,199 குழுக்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.65,930 கோடி ஆகும். இது மதுரை மாவட்டத்தில் 18.80 கோடியாகும். 2011-12 முதல் 31-3-2020 வரை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 3,83,063 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,613.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2011-12 முதல் 31-3-2020 வரை மதுரையில் மட்டும் 1,313 குழுக்களுக்கு ரூ.322.6 கோடி வழங்கப்பட்டுள்ளன

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சிறப்பு அங்காடி தலைவர் வில்லாபுரம் ராஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×