search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்

    சென்னையில் தினமும் 600 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
    சென்னை:

    சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 13 ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்நோய் அவரது தொடர்பு மூலம் எளிதாக பரவுவதால் நோயின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே முன் வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

    சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., எழும்பூர் மகப்பேர் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.

    இதுதவிர குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, மாநகராட்சி சுகாதார ஆய்வுக்கூடங்கள் மற்றும் தனியார் ஆய்வகங்கள் என தமிழகத்தில் 60 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், தேனாம் பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் பரிசோதனை கூடங்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன.

    சென்னையில் தினமும் 600 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் வந்த உடனேயே பரிசோதனை கூடங்களுக்கு செல்ல முன் வருகிறார்கள். இதனால் ஆய்வுக்கூடங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    காலை 8 மணி முதலே வரிசையில் நிற்கிறார்கள். தனியார் ஆய்வகங்களிலும் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய ஒரு பக்கம் குவிகிறார்கள். வரிசையில் அமர்ந்திருக்கும் அவர்களை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து அழைக்கிறார்கள்.

    சென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை செய்ய பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை என்றும் காத்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவு வர செய்து 8 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை நீடிக்கிறது.

    ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்ய ஒரு பக்கம் கூட்டமும் நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அட்மி‌ஷன் செய்ய ஒரு கூட்டமும் வரிசையில் நிற்கிறது. தனிமைப்படுத்துதல், வார்டுகளில் சேர்த்தல், பரிசோதனை செய்தல் போன்ற பல்வேறு மருத்துவ பணிகளில் ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 12க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் செயல்படுகின்றது. இன்னும் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே இந்த கூட்டத்தை சமாளிக்க முடியும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பரிசோதனை செய்ய வரும் பொதுமக்களை அதிக நேரம் காத்திருக்காமல் விரைந்து பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    Next Story
    ×