search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்பாட்டு பகுதி
    X
    கட்டுப்பாட்டு பகுதி

    கட்டுப்பாட்டு பகுதிகள் நீக்கப்படுவதால் கொரோனா வேகமாக பரவுகிறதா?

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 65 கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டுப் பகுதிகள் தளர்வு செய்யப்பட்டு இருப்பதால் கொரோனா வேகமாக பரவுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய அரசு ஆஸ்பத்திரிகள் பரிசோதனை கூடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே பரிசோதனைக்கு முன் வருகிறார்கள். பாதிப்பு ஏற்பட்ட ஒருவருடன், தொடர்பு உடையவர்கள் பயத்தில் பரிசோதனை செய்ய வருவதால் ஆய்வு கூடங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் தாமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதனால் வீடுகளில் பலர் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் கொரோனா அதிகம் பாதித்துள்ள 8 மண்டலங்களில் அதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மூலிகை தேநீர், வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை கொடுத்து எதிர்ப்பு சக்திகளை மக்களுக்கு உருவாக்கி வருகின்றனர்.

    இதற்கிடையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தளர்வு செய்யப்படுகிறது. இதனால் மக்கள் சாதாரணமாக எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுவரையில் 795 கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 14 நாட்கள் வரை அந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாததால் கட்டுப்பாட்டு பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 356 கட்டுப்பாட்டுப் பகுதிகள் மட்டுமே சென்னையில் உள்ளன. ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 98 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

    ராயபுரம் மண்டலம்

    திரு.வி.க.நகர் பகுதியில் 53 கட்டுப்பாட்டுப் பகுதிகளும், மாதவரம் மண்டலத்தில் 50 கட்டுப்பாட்டுப் பகுதிகளும் உள்ளன. அம்பத்தூர் மண்டலத்தில் 30 கட்டுப்பாட்டுப் பகுதிகளும் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

    நேற்று ஒரே நாளில் 65 கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டுப் பகுதிகள் தளர்வு செய்யப்பட்டு இருப்பதால் கொரோனா வேகமாக பரவுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    ஆனாலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனா பாதிப்பிலிருந்து தப்ப முடியும். பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சென்னையில் தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் கொரோனா அதிகமுள்ள மண்டலங்களில் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×