search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களால் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 96 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு திரும்பி வந்தவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் சிலரது ரத்த மாதிரி முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய தாய்-மகள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    பழனி நேதாஜி நகரைச் சேர்ந்த 39 வயது பெண், அவரது 9 வயது மகள் ஆகியோருக்கும், கேத்தைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 25 வயது ஆண், சாணார்பட்டி அருகே உள்ள கள்ளுப்பட்டியைச் சேர்ந்த 26 வயது ஆண், வத்தலக்குண்டு அருகே உள்ள சாமிமுத்தன்பட்டியைச் சேர்ந்த 24 வயது ஆண் ஆகிய 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இவர்கள் 5 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஆவர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

    பழனி நகரம் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக மாறி இருந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களால் மீண்டும் கொரோனா பாதிப்பு பகுதியாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் போடியைச் சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்தார். மற்ற 50 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தற்போது முத்துலாபுரம் பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய ஆண், 3 வயதுடைய பெண் குழந்தை ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அமரர் ஊர்தி டிரைவர் மூலம் தொடர்பில் இருந்தவர்கள். இதனால் தற்போது 45 பேர் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவே அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

    விரைவில் 100-ஐ எட்டும் என்று அஞ்சப்படுகிறது.

    Next Story
    ×