search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரடி
    X
    கரடி

    வத்திராயிருப்பு அருகே ஊரடங்கு நேரத்தில் ஊருக்குள் உலா வந்த கரடி

    வத்திராயிருப்பு அருகே ஊரடங்கு நேரத்தில் ஊருக்குள் வந்து உலாவிய கரடி, 5 மணி நேர போராட்டத்துக்கு பின்பு பிடிபட்டது.
    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கரடி, மான், சிறுத்தை, யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை வெயில் காரணமாக நீர்நிலைகள் வற்றிவிட்டதால் தண்ணீர் மற்றும் இரை தேடி வனவிலங்குகள் மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள மகாராஜபுரம் கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. இரவு முழுவதும் ஊருக்குள் உலாவிய கரடி, விடிந்த பின்னர் காட்டுக்குள் செல்லாமல் அப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் பதுங்கியது.

    இதையடுத்து நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்த 2 பேர் விறகு வெட்டுவதற்காக கரடி பதுங்கியிருந்த பகுதிக்கு சென்றனர். அங்கு கரடி இருப்பதை கண்ட இருவரும் அலறியடித்து ஓடினர்.

    இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினர் மற்றும் வத்திராயிருப்பு போலீசார், பட்டாசுகளை வெடித்து முட்புதரில் இருந்து கரடியை வெளியே வரவழைத்தனர்.

    அதன் பின்னர் ஆட்களை கண்ட அந்த கரடி, குடியிருப்பு பகுதியை நோக்கி ஓடியது. அங்கு சுற்றித்திரிந்த அந்த கரடியை வனத்துறையினர் வலை விரித்து லாவகமாக பிடித்தனர். கரடியை பிடிக்கும் போராட்டம் சுமார் 5 மணி நேரம் நீடித்தது. வலையில் சிக்கிய அந்த கரடியை வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள மாவூற்று மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் கரடி ஏற்படுத்திய பரபரப்பு அதன் பின்னரே அடங்கியது.
    Next Story
    ×