search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படாது

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் 40 நாள் முழு ஊரடங்குக்கு பிறகு நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்படும் என்றும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 154 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தற்போது இருப்பு குறைவாக இருக்கும் என்பதாலும் நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு நாளை கடைகள் திறக்கப்படுவதாலும் புதிதாக மதுபானங்களை இறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் இரவுக்குள் மதுபானங்கள் அந்த அந்த கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் தற்போது உள்ள நிலவரப்படி கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படாது.

    திறக்கப்பட்ட கடைகள் முன்பு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தவாறு இருக்க வேண்டும். மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் வரும் நபர்களுக்கு மதுபானங்கள் வழங்க கூடாது. விற்பனையாளர்களும் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து மதுபானங்களை வழங்க வேண்டும். கூட்ட நெரிசல் மற்றும் பிரச்சினைகள் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து கடைகளிலும் நெரிசலை தவிர்க்க மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஒரு நபருக்கும், மற்றொரு நபருக்கும் இடையே இடைவெளியே கடைபிடிக்க வட்டம் வரையப்பட வேண்டும். கடைகள் முன்பு கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×