என் மலர்

  செய்திகள்

  முடிதிருத்தம்
  X
  முடிதிருத்தம்

  ஊரடங்கால் மூடப்பட்ட சலூன், பியூட்டி பார்லர்கள்- முடி திருத்தும் நிலையங்களாக மாறிய வீடுகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊரடங்கால் சலூன், பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டுள்ளதால் முடி திருத்துபவர்கள் வாடிக்கையாளர்களை வீட்டிற்கு வரவழைத்து முடி திருத்தம் செய்து வருகிறார்கள்.
  திருச்சி:

  கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மருத்துவர் என்று அழைக்கப்படும் முடி திருத்துவோரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.

  கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் முடி திருத்துபவர் வீட்டிற்கு வந்து குழந்தைகள், பெரியவர்களுக்கு சிகை அலங்காரம் செய்வார்கள்.

  நாகரீக உலகம் முடி திருத்துபவர்களின் முறையையும் மாற்றிவிட்டது. இன்று அனைவரும் சலூன், பியூட்டி பார்லர் என்று அழைக்கப்படும் அழகு நிலையங்களுக்குச் சென்று வருகிறார்கள்.

  கொரோனா வந்ததால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள், சலூன் கடைகள் மூடப்பட்டு விட்டன. 30 நாட்களாக தலையில் வளர்ந்த அடர்ந்த முடியுடன் திருச்சியில் கொளுத்தும் வெயிலில், வியர்வையால் தலைவலி வந்து தாங்க முடியாமல் தவித்த மக்களுக்கு சலூன் கடைகள் அடைப்பால் பல சங்கடங்கள் ஏற்பட்டன.

  இந்நிலையில் பல முடி திருத்தும் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை வீட்டிற்கு வரவழைத்தும், அவர்கள் வீட்டிற்கு சென்றும் முடி திருத்தும் பணிசெய்து வருகிறார்கள். இது பொதுமக்களுக்கு வசதியாக இருப்பதோடு வேலை இல்லாமல் தவித்து வந்த ஆயிரக்கணக்கான முடி திருத்தும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் வசதியாக உள்ளது என்கிறார்கள்.

  கடந்த 20 நாட்களாக இவ்வாறு வீட்டில் வைத்து சலூன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் தவிர்க்க முடியாமல் நடத்தப்பட்ட திருமண வீடுகளுக்கு முடி திருத்தும் தொழிலாளர்கள் சென்று மணமகன்களை அழகுபடுத்தி வருகிறார்கள். எப்போதும் விடுமுறை காலங்களில் சலூன்கள் நிரம்பி வழியும். இப்போது முடி திருத்துபவர்களின் வீடுகள் நிரம்பி வழிகின்றன.

  இதுகுறித்து வயலூரில் தனது வீட்டில் வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்தம் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

  நாங்கள் பரம்பரை பரம்பரையாக முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறோம். முடிதிருத்தும் தொழில் செய்தாலும் எங்கள் மூதாதையர்கள் பிரசவம் பார்ப்பது, மூலிகை வைத்தியம் பார்ப்பது, வர்மம் எடுப்பது, பரு நீக்குவது, வி‌ஷக்கடி வைத்தியம் பார்ப்பது என பணிகள் செய்ததால் எங்களை மருத்துவர்கள் என்று அழைக்கிறார்கள்.

  இப்போது எங்கள் தொழிலை பார்த்து பிறரும் வந்து விட்டனர். நாங்களும் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப வீட்டு முற்றம், வேப்ப மரத்தடியில் முடிவெட்டுதலை விட்டு பல லட்சம் கடன் வாங்கி அழகு நிலையம் நடத்தி வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் 30 நாட்களுக்கு மேலாக சலூனை திறக்க முடியவில்லை. ஆனாலும் குடும்பத்திற்கு வருமானம் தேவைப்படுகிறது. வங்கி கடனையும் அடைக்க வேண்டும்.

  எனவே வாடிக்கையாளர்களை வீட்டுக்கே வரவழைத்து முடிதிருத்தம் செய்கிறோம். சில தொழிலதிபர்கள், அதிகாரிகள் எங்களை வீடுகளுக்கு அழைக்கிறார்கள். அவர்களின் வீடுகளுக்குச் சென்று முடிதிருத்தம் செய்கிறோம். எங்கள் தாத்தா, தந்தை, மூதாதையர்கள் செய்ததைப் போன்று 40 வருடத்திற்கு பிறகு அதே சூழ்நிலையில் நாங்கள் செய்வது வித்தியாசமாக உள்ளது.

  வாடிக்கையாளர்கள் சிலர் வீட்டிற்கு செல்லும்போது வழியில் போலீசார் பிடிக்கிறார்கள். எனவே போலீசார் வாரத்திற்கு இரண்டு நாட்கள் செல்ல கொடுத்த அனுமதியை இதற்கு பயன்படுத்துகிறோம். தினமும் 5 முதல் 10 பேர் வரை வீட்டிற்கு வந்து முடிதிருத்தம் செய்து செல்கிறார்கள்.

  மாஸ்க், கையுறை, கிருமி நாசினி அனைத்தும் பயன்படுத்துகிறோம். கடை திறந்திருந்தால் தினமும் 20 முதல் 30 பேர் வரை வருவார்கள். இப்போது அது பாதியாக குறைந்து இருக்கிறது. எனினும் சமாளித்து வருகிறோம் என்றார்.

  Next Story
  ×