search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு
    X
    மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு

    வீடு, வீடாக சென்று கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்

    வீடு, வீடாக சென்று கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு கூறி உள்ளார்.
    திருச்சி:

    கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க கொரோனா நிவாரணம் பொதுவினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களுக்கான டோக்கனும், ரேஷன்கடைகளில் நிவாரண உதவித்தொகையும் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி நிவாரண உதவித்தொகை ரூ.1,000 வீடு,வீடாக சென்று வழங்கப்படும். மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வழங்கப்படும். இன்றைக்கு (சனிக்கிழமை) ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகையும், பொருட்களும் வழங்கப்படும். இந்த பணி முடிக்கப்பட்டவுடன் அன்றைய தினமே ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் ரூ.1,000 நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்காது. அன்றைய தினமே வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் ரூ.1,000-மும் வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கான தேதி டோக்கனில் குறிப்பிடப்பட்டு இருக்கும். 6-ந் தேதி அன்று ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேஷன்கடைகளில் வழங்கப்படும். அன்றைய தினமே விடுபட்ட இனங்களுக்கு விற்பனை முனைய எந்திரத்தின் மூலமாக வீடு, வீடாக சென்று டோக்கனும், நிவாரண உதவித்தொகையும் வழங்கப்படும்.

    7-ந் தேதி அன்றிலிருந்து டோக்கன் வழங்கப்பட்ட இனங்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். எக்காரணத்தை கொண்டும் நிவாரண உதவித்தொகை ரேஷன்கடைகளில் வழங்கப்படாது.

    டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் மட்டுமே பொருட்களை பெற ரேஷன்கடைகளுக்கு வர வேண்டும். நிவாரண உதவித்தொகை ரூ.1,000 விற்பனை முனைய எந்திரத்தின் மூலமாக வழங்கப்படும். மேலும், பதிவேட்டில் ஒப்பம் பெறும் நடைமுறையும் பின்பற்றப்படும். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×