search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்பூசணி
    X
    தர்பூசணி

    கானல் நீராய் பொய்த்து போன தர்பூசணி விற்பனை: விவசாயிகள், வியாபாரிகள் வேதனை

    ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தர்பூசணி அறுவடை செய்யும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    விவசாய பூமியை அன்னையாக நினைத்து வாழ்ந்து வரும் விவசாயிகள் இன்னும் பலர் உள்ளதால் தமிழகத்தில் ஓரளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், வடநெற்குணம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1500 ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டு இருந்தனர்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீடிக்கும் என்பதால் தர்பூசணி அறுவடை செய்யும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் விளைந்த தர்பூசணி பழங்கள் செடியில் இருந்து பறிக்கப் படவில்லை.

    இதனால் ரூ.15 கோடி மதிப்பிலான தர்பூசணி பழங்கள் அழுகி விட்டன. இந்த நஷ்டத்தை விவசாயிகள் எப்படி சமாளிக்க போகிறோம்? என்று கலங்கி போய் உள்ளனர்.

    திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு, செங்கம், சந்தவாசல், படவேடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 25,000 ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்து உள்ளனர். அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். வழக்கமாக 8 கிலோ எடை கொண்ட ஒரு தர்பூசணி ரூ.150-க்கு விற்பனையாகும். ஆனால் தற்போது ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. இது அறுவடை செலவுக்கு போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். சில விவசாயிகள் தர்பூசணி பழங்களை சாலையோரம் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    ஊரடங்கு உத்தரவு காரணமாக அவைகளை வாங்க ஒரு சிலரே வருகின்றனர். அவர்கள் விற்பனையாகாமல் கிடக்கும் தர்பூசணி பழங்களை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். இதனால் பாடுபட்டும் பலன் காண முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    இதுதொடர்பாக விவசாய சங்க நிர்வாகி புருஷோத்தமன் கூறும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 25000 ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இப்போது எந்த தடை உத்தரவும் இல்லாமல் இருந்தால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வரை லாபம் சம்பாதித்து இருப்பார்கள்.

    அறுவடை செய்த தர்பூசணி பழங்களை லாரிகளை கொண்டு வந்து எடுத்துச் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. அப்படியே கொண்டு சென்றாலும் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் அவைகளை விற்பனை செய்வது கடினமாக உள்ளது.

    இதனால் விவசாயிகள் ரூ.25 கோடி வரை இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

    திருவண்ணாமலையில் கோடை காலத்தை முன்னிட்டு வியாபாரிகள் லோடு கணக்கில் தர்பூசணி பழங்களை வாங்கி கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வந்தனர். மக்கள் ஊரடங்கு உத்தரவால் வாங்கிய தர்பூசணி பழங்களை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். தற்போது கிலோ 10 ரூபாய்க்கு தர்பூசணி பழங்கள் விற்பனை செய்த போதிலும் அவைகளை வாங்க மக்கள் வருவதில்லை.

    இதன் எதிரொலியாக தர்பூசணியை வாங்கிய வியாபாரிகள் அனைவரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களும் தங்களுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

    சில வியாபாரிகள் மட்டும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து தெருத்தெருவாக சென்று தர்பூசணி பழங்களை விற்பனை செய்கின்றனர். இருந்த போதிலும் உயிருக்கு பயந்து வீட்டில் இருக்கும் பொதுமக்கள் தர்பூசணி பழங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டவில்லை.

    கானல்நீராய் போய்த்து போன தர்பூரணி விற்பனையால் சிறு விவசாயிகளும், சிறிய வியாபாரிகளும் எப்படி பிழைப்பது? எப்படி தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவது? என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    பருவமழை பொய்த்தாலும், பேரிடர் வந்தாலும் எங்கள் கதி அதோ கதிதான் என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.
    Next Story
    ×