search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சாவூர் ரெயில் நிலையம்
    X
    தஞ்சாவூர் ரெயில் நிலையம்

    தஞ்சை ரெயில் நிலையம் மூடப்பட்டது- அனைத்து ரெயில் சேவைகளும் 31-ந்தேதி வரை ரத்து

    கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று முதல் அனைத்து ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. வரும் 31-ந்தேதி வரை இந்த ரத்து அமலில் இருக்கும்.
    தஞ்சாவூர்:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே ரெயில் சேவைகள் வெகுவாக குறைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ரெயிலில் பயணம் செய்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வரும் 31-ந்தேதி வரை நாடு முழுவதும் சொகுசு ரெயில்கள், பாசஞ்சர் ரெயில், மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில், புறநகர் ரெயில் என அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் இன்று எந்த ஒரு ரெயிலும் இயக்கப்படவில்லை. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்தும், தஞ்சை வழியாகவும் 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 20-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக இன்று முதல் அனைத்து ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. வரும் 31-ந்தேதி வரை இந்த ரத்து அமலில் இருக்கும்.

    இதையொட்டி ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள 4 முன்பதிவு டிக்கெட் வழங்கும் மையங்களும் மூடப்பட்டன. மேலும் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பேரிகார்டு வைத்து மூடப்பட்டது.

    ஏற்கனவே பின்புற நுழைவு வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது.

    தஞ்சை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் ரத்து என்ற அறிவிப்பு பலகை ரெயில் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயிலில் பயணம் செய்பவர்கள் காலையில் ரெயில் நிலையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் முன்பதிவு செய்திருந்தவர்கள் ஜூன் 21-ம் தேதி வரை தங்களது கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்று கொள்ள அனுமதிக்கப்படுவர். பயணிகள் சிரமமின்றி கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ரெயில் நிலையத்தில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ரெயில்கள் ரத்தால் தஞ்சையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்கள் பஸ்களில் பயணம் செய்தனர். பஸ்களின் சேவைகளும் வழக்கத்தை விட குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×