search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீப்பெட்டி
    X
    தீப்பெட்டி

    கோவில்பட்டியில் கொரோனா அச்சுறுத்தலால் தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்

    கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக கேரளாவுக்கு செல்ல முடியாததால் மரத்தடிகள் வருகை நின்று, தீப்பெட்டி சார்ந்த தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கோவில்பட்டி:

    தீப்பெட்டி தயாரிப்பின் இதயமாக இருப்பது குச்சிகள் தான். தமிழகம் முழுவதும் தீக்குச்சி தயாரிப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த குச்சிகள் தயாரிக்க தேவையான மரத்தடிகள் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தப்படும் மரதடிகள் தமிழகத்திற்கு கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம் உருவாகி உள்ளது.

    இங்குள்ள குச்சி கம்பெனிகளில் மரத்தடிகளை ஒரு அடி அளவுக்கு அறுத்து, பட்டைகளை உரித்த பின்னர் எந்திரம் மூலமாக குச்சிகள் செய்யப்படுகின்றன. பின்னர் அவை தீப்பெட்டி ஆலைகளுக்கு கிலோ கணக்கில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு மருந்தில் முக்கி தீக்குச்சி தயார் செய்யப்படுகிறது.

    கோவில்பட்டி பகுதியில் இருந்து ஏழாயிரம் பண்ணை, சிவகாசி, சாத்தூர், குடியாத்தம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு தீக்குச்சிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தீக்குச்சி ஏற்றுமதியை நிறுத்துமாறும், அங்கு மரம் அறுக்க வேலையாட்கள் வர வேண்டாம் எனவும் வியாபாரிகள் அறிவுறுத்தி வருவதால் கடந்த ஒரு வார காலமாக வேலை எதுவும் நடைபெறவில்லை.

    இதுகுறித்து குச்சி கம்பெனி உரிமையாளர்கள் கூறும்போது, ‘கேரளாவில் இருந்து அல்பீசா, மட்டி ரக மரத்தடிகள் வருகின்றன. கர்நாடகாவில் இருந்து குச்சி முருங்கை மரத்தடிகள் வாங்குவோம். இதனை நாங்கள் சென்று பார்த்து தான் முன்பணம் கொடுத்து வருவோம். அவர்கள் அதன் பின்னர் மரத்தை வெட்டி, அந்த தடிகளை லாரிகள் மூலமாக எங்கள் கம்பெனிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நான் கேரளா செல்லலாம் என்று இருந்தேன். ஆனால் தற்போது அங்குள்ளவர்கள் என்னை வரவேண்டாம் என கூறிவிட்டனர். இங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் வேலையாட்கள் வரவில்லை என்று கூறிவிட்டனர். தமிழகத்துக்கு கடந்த வாரம் மரத்தடி லோடு வந்தது. அந்த மரத்தடிகளை கொண்டு இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே குச்சிகள் தயாரிக்க முடியும்.

    அதன் பின்னர் குச்சி கம்பெனிகள் மட்டுமின்றி அதனை நம்பி உள்ள தீப்பெட்டி ஆலைகளும் மூடும் நிலை ஏற்படும். இதனால் குச்சி தயாரிப்பு, தீப்பெட்டி ஆலைகள், சுமை தொழிலாளிகள் என சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே கைகளால் செய்யும் தீப்பெட்டி ஆலைகள் குறைந்து, எந்திர தீப்பெட்டி உற்பத்தி வந்த பின்னர் குச்சிகளை அவர்களே தயாரிக்கும் நிலை வந்து விட்டது. இது ஒரு பாதிப்பு என்றால், நாங்கள் தயாரிக்கும் பொருளுக்கு எங்களால் விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.

    அதுமட்டும் அல்லாமல் இங்குள்ள தொழிலாளர்கள் தான் கேரளாவில் மரம் வெட்டும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவர்கள் கேரளாவுக்கு செல்லவில்லை. இதனால் மரத்தடிகள் வருகை நின்று, தீப்பெட்டி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்’ என்கின்றனர்.
    Next Story
    ×