search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவாரூர், தேனி, தர்மபுரியில் பெண் உள்பட 4 பேருக்கு ‘கொரோனா’ அறிகுறி

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் திருவாரூர், தேனி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த பெண் உள்பட 4 பேருக்கு கொரோனா அறிகுறி காரணமாக தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    திருவாரூர்:

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    வெளிநாட்டிலிருந்து வருபவர்களை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின்னரே வெளியே அனுப்புகிறார்கள்.

    இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் 20 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பி உள்ளார். நேற்று அவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்படவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

    நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 11-ந்தேதி அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு நேற்று இரவு காய்ச்சல் ஏற்படவே அவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

    வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வந்த 92 பேரில் கொரோனோ சந்தேகத்துடன் 49 பேர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

    உலக சுற்றுலா தலமான வேளாங்கண்ணிக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவதுடன், அவர்கள் தங்கும் இடம் குறித்தும் அவர்களின் உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் வேலைக்காக கேரளா சென்று வந்தார். தற்போது அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    உடனடியாக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரியை எடுத்து புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அதன் முடிவு தெரிந்த பின்னர்தான் பெண்ணுக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று உறுதி செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

    தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த அஜ்ஜல்வாடி அருகே உள்ள குடுமியாம்பட்டி பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் லேப் டெக்னீசியன் படிப்பை படித்து உள்ளார்.

    இவர் அண்மையில் பெங்களூரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். கடந்த சில நாட்களாக இவருக்கு தொண்டை வலி, காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் வாலிபரை சோதித்தனர்.

    அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. மருத்துவக்குழுவினர் நடத்திய பரிசோதனைகளின் முடிவில் வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று தெரியவந்தது. அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதால் அவர் ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×