search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் முதியவர் அனுமதி

    ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் ஹாங்காங்கில் இருந்த வந்த முதியவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    நாகர்கோவில்:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது.

    இந்தியாவில் இருந்து சீனாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற கேரள மாணவ- மாணவிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயந்து ஊர் திரும்பினர். இவர்களை கேரள சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    அவர்கள் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர்கள் 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

    கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதற்காக தனி வார்டும் திறக்கப்பட்டது.

    சீனாவில் இருந்து குமரி மாவட்டம் வந்த மாணவி ஒருவர் இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு நோய் அறிகுறி இல்லை என்று தெரியவந்ததை தொடர்ந்து அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    இவர் சமீபத்தில் தான் ஹாங்காங் நாட்டில் இருந்து ஊர் திரும்பி உள்ளார். அங்கு கொரோனா வைரஸ் நோய்க்கு சில நாட்கள் அவர் சிகிச்சை பெற்றதாக தெரிகிறது.

    தூத்துக்குடி முதியவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததை தொடர்ந்து அவர் ஊர் திரும்பி உள்ளார். இங்கிருந்து மீண்டும் அவர் ஹாங்காங் செல்ல திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு உள்ளார். நாகர்கோவில் வந்த போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த போது ஹாங்காங்கில் இருந்து திரும்பிய தகவலை தெரிவித்தார். இதை கேட்டதும், தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்தே, தூத்துக்குடி முதியவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜன் கூறியதாவது:-

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள முதியவருக்கு 72 வயது ஆகிறது. அவர் ஹாங்காங்கில் இருந்த போது கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார். இப்போது வயிற்றுவலி இருப்பதாக கூறியுள்ளார். கல்லீரலில் கிருமி தொற்று காரணமாக வயிற்றுவலி ஏற்பட்டிருக்கலாம்.

    இருப்பினும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ளோம். இதற்காக அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். அதன் முடிவுகள் வந்த பின்னரே அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்படும். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×