search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்
    X
    டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்

    திருச்செந்தூரில் கோலாகலம்- சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவை சிறப்பித்த தலைவர்கள்

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா திருச்செந்தூரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    திருச்செந்தூர்:

    தமிழக மக்களால் “சின்னய்யா” என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவர் பத்மஸ்ரீ, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்.

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை ஆகிய 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சாதனைகள் காலத்தால் மறக்க இயலாதவை. சாதி, மதம் கடந்து தன்னலமற்ற வகையில் இந்த 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சேவைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் உலக அரங்கில் தலைநிமிர செய்தன.

    கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் துறைகளில் அவர் செய்த மகத்தான சேவைகளை பாராட்டி 5 பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கின. மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சர்வதேச ஒலிம்பிக் கழகம் “ஸ்போர்ட்ஸ் அண்டு ஸ்டடி அவார்டு” வழங்கி பெருமைப்படுத்தியது.

    காஞ்சி மகாபெரியவர், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் உள்பட ஏராளமான ஆன்மீக பெரியவர்களும் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு பல்வேறு பட்டங்களை சூட்டி மகிழ்ந்து உள்ளனர். இத்தகைய சிறப்புடைய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மணிமண்டப கட்டுமான பணிகளை தொடங்கின. 60 சென்ட் நிலப்பரப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் நடுவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

    டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்

    மணிமண்டபத்தின் மற்றொரு பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக அலுவலகத்துடன் கூடிய நூலகமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டப கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா (சனிக்கிழமை) திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினத்தில் மிக மிக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    அவர் சென்ற விமானம் 9.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கு அவரை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வரவேற்றனர். பிறகு 9.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கார் மூலம் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனர்.

    தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வரை சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முத்தையாபுரம், முக்காணி, புன்னக்காயல், பழையகாயல், வடக்கு ஆத்தூர்-தெற்குஆத்தூர், ஆறுமுகநேரி ஆகிய 6 இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

    பல இடங்களில் மேள தாளங்கள் முழங்க அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஏராளமான அ.தி.மு.க.வினர் மலர் மாலைகளும், பூச்செண்டுகளும், சால்வைகளும் வழங்கி வரவேற்றனர். அந்த வரவேற்புகளை ஏற்றுக் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூருக்கு சென்றார்.

    முன்னதாக 10.55 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழா நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்.

    அவரை ‘தினத்தந்தி’ அதிபர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், ‘தந்தி டி.வி.’ இயக்குனர் ஆதவன் ஆதித்தன் ஆகியோர் வரவேற்றனர்.

    11.20 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோர் மணிமண்டபம் உள் பகுதிக்கு சென்றனர்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் பல்வேறு வகையான வண்ண மலர்களால் கண்ணை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணிமண்டபத்தை 11.24 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.

    இதையடுத்து 11.26 மணிக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பட்டு வண்ண துணி விலகியதும் கம்பீரமான சிவந்தி ஆதித்தனாரின் சிலை காட்சி அளித்தது. அப்போது மங்கல இசை இசைக்கப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலை அருகே அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் ஆதவன் ஆதித்தன் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் சிவந்தி ஆதித்தனார் சிலை அருகில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் தலைவர்கள் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து 11.36 மணிக்கு மணிமண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகத்துக்குள் முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் சென்றனர். அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து அவர்கள் இருவரும் நூலக புத்தகங்களை பார்வையிட்டனர்.

    நூலகத்தை சுற்றிப்பார்த்த அவர்கள் இருவரும் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் கண்டு அறிந்தனர். பின்னர் நூலக ஊழியர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நூலகத்தின் சிறப்புகள் பற்றி கேட்டு அறிந்தார். பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டார்.

    மணிமண்டபத்தில் இருந்து வீரபாண்டிய பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் விழா நடைபெறும் இடத்துக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இருவரும் காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். வழிநெடுக சாலை இருபுறமும் ஏராளமான பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும் திரண்டு நின்று அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    இதனால் முதல்-அமைச்சரின் கார் மெல்ல சென்றது. 11.45 மணிக்கு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் விழா மேடைக்கு வந்தனர். தமிழ் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

    விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்றார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் மற்றும் சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசினார். 11.55 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கல்வெட்டை திறந்து வைத்தார்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கல்வெட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த போது எடுத்த படம்.

    இதையடுத்து ரூ.260.06 கோடி செலவில் செய்யப்பட உள்ள 47 புதிய திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் ரூ.53.13 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ள 11 திட்டப் பணிகளுக்கான கல்வெட்டுகளையும் அவர் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்கள். பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா பேருரை நிகழ்த்தினார். இறுதியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் குடும்பத்தின் சார்பில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நன்றி தெரிவித்தார்.

    விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், விஜயபாஸ்கர், பாண்டியராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சசிகலா புஷ்பா எம்.பி., விஜிலா சத்யானந்த் எம்.பி., வசந்தகுமார் எம்.பி.,

    எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், இன்பதுரை, ரெட்டியார் பட்டி நாராயணன், முகமது அபுபக்கர், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், பச்சைமால், செல்ல பாண்டியன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகநாதன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம், வி.வி. வைகுண்டராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்.

    பனங்காட்டு படை மக்கள் கழகம் சுபாஷ் பண்ணையார், நாடார் மகாஜன சங்கம் கரிக்கோல்ராஜ், தெட்சண மாறநாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், அய்யா வழி பாடகர் சிவசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, முன்னாள் எம்.பி. ராமசுப்பு.

    இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயகுமார், முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், முன்னாள் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், தெட்சண மாறா நாடார் சங்கத்தைச் சேர்ந்த சண்முக வேல், கணேசன், வக்கீல் ராமச்சந்திரன், தண்டுபத்து ஜெயராமன், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், அ.தி.மு.க. மீனவர் அணி செயலாளர் ரமேஷ், ரவிதாஸ், ராஜா, தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை, நெல்லை ஆவின் சேர்மன் சுதா பரமசிவன், தி.மு.க. வை சேர்ந்த ஜோயல், மும்பை காசி லிங்கம், தெட்சண மாற நாடார் சங்கம் சென்னை தங்கம், செல்வராஜ், கொட்டிவாக்கம் முருகன்,  கர்நாடக மாநில புகழேந்தி, இந்து முன்னணி அரசகுமார், சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் சுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கே.ஆதித்தன், முன்னாள் நெல்லை துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் யூனியன் சேர்மன் கல்லூரி வேலாயுதம், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், நெல்லை நாடார் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன்.
    Next Story
    ×