search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    போலீஸ் தேர்வுக்கு இடைக்கால தடை- ஐகோர்ட்டு உத்தரவு

    போலீஸ் தேர்வு முடிவுக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கை வருகிற மார்ச் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நிர்வாகம் நடத்திய குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பான வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் (போலீஸ்) தேர்வாணையம் நடத்திய தேர்விலும் முறைகேடு நடந்தியிருப்பதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் உள்பட 15 பேர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக காவல்துறையில் 2ம் நிலை காவலர்கள், சிறைத்துறை வார்டன்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் என்று மொத்தம் 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.

    பின்னர், எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது.

    கடந்த 2-ந்தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இவர்களில் பலர் முறைகேடுகள் செய்து தேர்வாகி உள்ளனர்.

    தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற ‘கட் ஆப்’ மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை. எனவே, இந்த தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.

    சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் மிகப்பெரிய முறைகேடுகளை நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை நீதிபதி ஏற்கவில்லை.

    ‘தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால் அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்’ என்று வேதனையுடன் கருத்து தெரிவித்தார்.

    ‘குறிப்பிட்ட பயிற்சி நிறுவனத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி போலீஸ் தேர்வில் தேர்வானார்கள்? அவர்கள் அனைவரும் எப்படி 69.5 என்ற ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெற்றனர்? எழுத்து தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேரை எப்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதித்தார்கள்?

    இதுபோன்ற மோசடி நபர்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்ந்தால் காவல்துறை என்னவாகும்? தமிழர்கள் ஆகிய நாம் நேர்மையை இழந்துவிட்டோம்’ என்று நீதிபதி கூறினார்.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘கிராமப்புற மக்கள் அரசு வேலையை மிகப்பெரிய வி‌ஷயமாக கருதுகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்றால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தி ஏற்படும். எனவே, இந்த போலீஸ் தேர்வு முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த வழக்கை வருகிற மார்ச் 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

    அதற்குள் சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய இதுபோன்ற தேர்வில் முறைகேடுகள் ஏதாவது நடந்ததா? என்பது குறித்து மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×