search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் தடியடி சம்பவம்: போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியல்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்காரரை கண்டித்து கும்பகோணம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    தஞ்சாவூர்:

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்காரரை கண்டித்து கும்பகோணம் மற்றும் சோழபுரம் பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்தார்கள், தமிழ் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் டி.எஸ்.பி.க்கள் ஜெயச்சந்திரன், அசோகன் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான சக்கராப்பள்ளி மற்றும் பண்டாரவாடையில் காவல்துறையை கண்டித்து நேற்று இரவு 10.30 மணிக்கு நூற்றுக்கணக்கானோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பெரியண்ணன், தாசில்தார் (பொறுப்பு)சீமான், இன்ஸ்பெக்டர் துர்கா, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்குமம் மேலாக நடந்த சாலை மறியலால் தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் முக்கூட்டு சாலையில் தடியடி சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் த.மு.மு.க, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, டி.என்.டி. ஜே, எஸ்.டி.பி.ஐ, ம.ம.க, கேம்பஸ் ப்ரண்ட் ஜாமியா, ஜமாஅத் எம்டிசிடி கேம்பஸ் ப்ரெண்ட் ஜாமியா மஸ்ஜித் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் தைக்காலில் நேற்று நள்ளிரவு சீர்காழி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் வனிதா பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    அதேபோல் சீர்காழி அடுத்த புத்தூரில் இஸ்லாமிய அமைப்பினர் சீர்காழி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மணிமாறன் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி-சென்னை தேசிய நெடுச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    Next Story
    ×