search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    டிஎன்பிஎஸ்சி ஊழியர்களின் சொத்து பட்டியல் கணக்கெடுப்பு

    டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், அலுவலர்களின் வருமானம் மற்றும் சொத்து கணக்கை சேகரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு பணியிடங்களை நிரப்ப அனைத்து வகையான தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

    தன்னாட்சி அமைப்பாக செயல்படும் தேர்வாணையம் மீது ஆரம்பத்தில் புகார்கள் வராத நிலையில் தற்போது அடுக்கடுக்கான புகார்கள் வரத்தொடங்கி உள்ளது.


    குரூப்-4 தேர்வு முறைகேடு, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு என அடுக்கடுக்கான தேர்வு முறைகேடுகள் தெரிய ஆரம்பித்துள்ளது.

    அரசுத்தேர்வு நடைபெறும்போது வினாத்தாள் வெளியாவதைத்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது விடைத்தாள்களையே மாற்றி எழுதி வைத்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.

    இவர்களுக்கு பின்னணியில் டி.என்.பி.எஸ்.சி.யில் யார்-யார் உள்ளனர் என்ற விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சங்கிலித்தொடர் போல் ஒவ்வொருவரும் விசாரணை வளையத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    அரசு வேலைக்கு பரீட்சை எழுதும் லட்சக்கணக்கானோர் இதுபோன்ற மோசடிகளை கண்டு அதிர்ந்துபோய் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிபெற பரீட்சை எழுதினால் மட்டும் போதாது புரோக்கரை பிடித்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற என்ணம் பலருக்கு ஏற்பட்டு விட்டது.

    இந்த களங்கத்தை துடைக்க மோசடி பேர் வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவர்களும், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் பலகோடி சொத்து சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தமிழக அரசு

    மோசடி பேர்வழிகளுக்கு பின்னால் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் சிலரும் இருப்பது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் வருமானம் மற்றும் சொத்து கணக்கை சேகரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. வேலைக்கு வருவதற்கு முன்பு எவ்வளவு சொத்து இருந்தது? வேலையில் சேர்ந்த பிறகு இப்போது எவ்வளவு சொத்து உள்ளது? என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
    Next Story
    ×