search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு- டிடிவி தினகரன் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்

    டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பியதுடன், முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை தப்பிக்கவிட முயற்சிப்பதாக சந்தேகம் எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி. ஊழல் பற்றி நாள்தோறும் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப்பணி என்பதை வாழ்நாள் கனவாகக் கொண்டு அதற்கென இரவு - பகலாக படித்து நம்பிக்கையோடு தேர்வு எழுதும் லட்சக்கணக்கான ஏழை, எளிய இளைஞர்களிடையே இ்த்தேர்வு முறைகேடு மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை தேர்வர்கள், இடைத்தரகர்கள் மற்றும் கீழ் மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய வலைப்பின்னலான முறைகேடு, அதிகார வர்க்கத்தினருக்கு தெரியாமல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பது மக்களின் சந்தேகமாக இருக்கிறது.

    இம்மோசடியில் ராமநாதபுரத்தில் இருந்து குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை சென்னைக்குக் கொண்டு வருவதற்கு ஆணையத்தின் சார்பில் மாணிக்கவேல் மற்றும் ஓம் காந்தன் ஆகிய ஊழியர்களை நியமித்தது யார்? 52 பேரின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்குக் காரணமானவர்கள் பற்றிய முழு விவரங்கள் வெளியில் வராமல் இருப்பது ஏன்? அவசர, அவசரமாக தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் அரசு, அதிகாரிகளைப் பற்றி மூச்சுவிடாதது ஏன்? 

    காவலர் சித்தாண்டிக்கும் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் புகார் குறித்து அடிப்படையாக கூட விசாரிக்கப்படவில்லை என்பது உண்மையா? முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பே, அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் அவசரமாக கூறியது ஏன்? அவர்களை அப்படி சொல்லச் சொன்னது யார்? தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரை முக்கியக் குற்றவாளியாகக் காட்டி, மற்றவர்களைத் தப்பிக்கவிட முயற்சிக்கிறார்கள் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டு உண்மையா? இப்படி மக்கள் மத்தியில் கேள்விகளின் பட்டியல் நீள்கிறது.

    ஆனால், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு மிக மோசமான அரசுத்தேர்வு ஊழலை அரங்கேற்றியிருக்கும் துறையைக் கையில் வைத்துள்ள, நாள்தோறும் மீடியா முன்பு வசனமழை பொழியும் அமைச்சரிடமோ, பழனிசாமி அரசாங்கத்திடமோ இதற்கெல்லாம் பதில் இல்லை. தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம்; இவர்கள் தூங்குபவர்களை போல நடிப்பவர்கள். இவர்களின் வழியாக நியாயம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று பொதுமக்கள் வேதனைக் கொள்வதை அறிய முடிகிறது.

    எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு தனது நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, விசாரித்து முடிப்பதற்கு காலக்கெடுவும் விதித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    Next Story
    ×