search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவள்ளூர் அருகே கர்ப்பிணி மகள் முகத்தில் ஆசிட் வீசிய தந்தை

    திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த மகள் முகத்தில் தந்தை ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பாக்கியலட்சுமி தம்பதி மகன் சாய்குமார் (21). ஏசி மெக்கானிக்.

    இவர் சென்னையில் வசிக்கும் போது அவரது வீடு அருகே வசித்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பாலகுமாரின் மகள் தீபிகா(20) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    இதனையறிந்த தீபிகாவின் தந்தை பாலகுமார் வீட்டை காலி செய்து விட்டு திருத்தணியில் குடியேறினார். அங்குள்ள கல்லூரியில் மகளை சேர்த்து வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாதவாறு அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா, சாய்குமாருக்கு கடந்த ஜூன் மாதம் போன் செய்து வரவழைத்தார். இருவரும் பெங்களூர் சென்று திருமணம் செய்தனர்.

    வெளியூரில் தங்கியிருந்த சாய்குமார், தீபிகா இருவரும் வேப்பம்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தனர். தற்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் சாய் குமார்வீட்டுக்கு தீபிகாவின் தந்தை பாலகுமார் வந்து அம்மாவின் உடல் நிலை சரி இல்லாததால் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு தீபிகா தந்தையுடன் செல்ல மறுத்தார்.

    ஆத்திரம் அடைந்த தந்தை பாலகுமார் கூச்சலிடவே, அவருடன் வந்திருந்த 4 பேர் வீட்டிற்குள் புகுந்து கையில் வைத்திருந்த பவுடர் கலந்த ஆசிட்டை தீபிகாவின் முகத்தில் பூச முயன்றுள்ளனர்.

    அதனை தடுக்க வந்த மாமியார் பாக்யலட்சுமியை தாக்கியதுடன் அவர் மீது ஆசிட்டை பூசியுள்ளனர். அப்போது வந்த மற்றொரு மருமகள் திவ்யா முகத்திலும் ஆசிட்டை பூசி மகள் தீபிகா முகத்திலும் ஆசிட் பூசிவிட்டு அவர் மயக்க நிலைக்கு வந்ததும் அங்கிருந்து காரில் கடத்திச் சென்றனர்.

    இது குறித்து சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதனையறிந்த தீபிகாவின் தந்தை தனது நண்பரின் காரில் இரவு 7 மணி அளவில் வேப்பம்பட்டு மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

    முகத்தில் ஆசிட் பூசியதால் முகம் வெந்து மிகுந்த வலியால் துடித்ததையடுத்து தீபிகா, பாக்யலட்சுமி, திவ்யா ஆகிய 3 பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முகத்தில் ஆசிட் பூசிவிட்டு காரில் கடத்திச் சென்ற பாலகுமார் கர்ப்பிணிப்பெண் என்றும் பார்க்காமல் மகளை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், சாய்குமாரை விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

    இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×