search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகரில் சரக்கு ரெயில் மோதி பெண் பலி

    மகள் திருமணத்தை முன்னிட்டு குலதெய்வம் கோவிலுக்குச் சென்று திரும்பிய பெண் சரக்கு ரெயில் மோதி பலியானார்.
    விருதுநகர்:

    சிவகாசி மருதுபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். அச்சகத் தொழிலாளி. இவரது 3-வது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மனைவி ஆதிலட்சுமி (வயது 56) மற்றும் குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட கணேசன் சென்றார். அங்கு வழிபாட்டை முடித்து விட்டு அனந்தபுரி எக்ஸ்பிரசில் இன்று காலை விருதுநகர் வந்தனர்.

    அந்த ரெயில் 3-வது நடைமேடைக்கு வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய ஆதிலட்சுமி மற்றும் குடும்பத்தினர், முதலாவது நடைமேடையில் நின்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க விரைந்தனர். 2-வது நடைமேடையில் இருந்து அவர்கள் தண்டவாளத்தை கடந்து சென்றனர்.

    அப்போது அந்த தண்டவாளத்தில் நிற்காமல் செல்லும் சரக்கு ரெயில் வேகமாக வந்தது. அந்த ரெயிலிலில் அடிபட்டு ஆதிலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    ரெயில்வே போலீசார் விரைந்து வந்து ஆதிலட்சுமி உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.

    விருதுநகர் ரெயில் நிலையத்தில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து உயிர்ப்பலி நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு காரணம் விருதுநகர் ரெயில் நிலையத்தில் அறிவிப்புகள் முறையாக தெரிவிக்கப்படாதது தான் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இன்று நடந்த விபத்துக்கு ரெயில்வே குளறுபடியே காரணம் என அவர்கள் தெரிவித்தனர். அனந்தபுரி ரெயிலில் வரும் பயணிகளில் பலர், விருதுநகரில் இறங்கி சிவகாசி, தென்காசி, செங்கோட்டை செல்ல பொதிகை எக்ஸ்பிரசை பிடிக்க விரைவது வழக்கம்.

    இதனை கருத்தில் கொண்டு அனந்தபுரி எக்ஸ்பிரசை 2-வது நடைமேடையில் கொண்டு வந்திருக்க வேண்டும். நிற்காமல் செல்லும் சரக்கு ரெயிலை 3 அல்லது 4-வது தண்டவாளங்களில் இயக்கி இருக்க வேண்டும்.

    இப்படி செய்திருந்தால் உயிர்ப்பலி ஏற்படாமல் தடுத்திருக்கலாம். இனியாவது பயணிகள் நலனில் ரெயில்வே நிர்வாகம் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என்று பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×