search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க அலைமோதிய மக்கள் வெள்ளம்.
    X
    பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க அலைமோதிய மக்கள் வெள்ளம்.

    ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு- மதுரை ரேசன் கடைகளில் அலைமோதிய கூட்டம்

    மதுரை ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் இதை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே ரேசன் கடைகளில் திரண்டனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ஏழை எளியவர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் கரும்புத்துண்டு ஒன்றும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 29-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரே‌ஷன் கடை களுக்கு உட்பட்ட தெருக்கள் வாரியாக பிரிக்கப்பட்டு கூட்ட நெரிசல் இல்லாமல் வழங்க திட்டமிடப்பட்டது.

    பொங்கல் பரிசு இன்று அனைத்து ரேசன் கடை களிலும் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே ரேசன் கடைகளில் திரண்டனர்.

    மதுரையில் வயதானவர்கள், பெண்கள் காலையில் ரேசன் கடை வாசலில் வரிசையில் காத்திருந்தனர். 9 மணி அளவில் ஊழியர்கள் ரேசன் கார்டு விவரங்களை சரிபார்த்து அவர்களுக்கு ரூ.ஆயிரம் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர். இதனால் மதுரையில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசு இன்றுமுதல் வழங்கப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளிலும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட ரூ. 1000 ரொக்கம் இரண்டு 500 ரூபாய் தாளாக, கவர் எதுவும் இல்லாமல் வெளிப்படையாக வழங்கப்பட்டது.

    பொங்கல் பரிசை வாங்கிய பின் பொதுமக்கள் மகிழ்ச்சியாக சென்றனர்.

    Next Story
    ×