search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்
    X
    பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்

    புகையான் பூச்சிகள் தாக்கத்தால் ஊத்துக்கோட்டை பகுதியில் 600 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

    ஊத்துக்கோட்டை பகுதியில் புகையான் பூச்சிகள் தாக்கத்தால் 600 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து உள்ளனர்.

    பொதுமான அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றும், நகைகளை அடமானம் வைத்தும் நெல்சாகுபடி செய்து இருந்தனர்.

    ஆனால் பொதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால் பயிர்கள் கருகாமல் தடுக்க சில விவசாயிகள் டேங்கர் லாரி தண்ணீரில் வயலுக்கு தண்ணீர் நீர் பாய்ச்சினர். பல இன்னல்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த தருணத்தில் தற்போது புகையான் பூச்சிகளால் நெற்பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக பால்ரெட்டி கண்டிகை, தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், லட்சிவாக்கம், பனம்பாக்கம், செஞ்சியகரம், சென்னங் காரணி, தும்பாக்கம், தொளவேடு, தண்டலம், ஆத்துப்பாக்கம் பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் பரப்பில் புகையான் பூச்சியால் நெற் பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பெரும் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகள் தங்களால் கூட்டுறவு வங்கிகள் பெற்ற கடனை திரும்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறும் போது, “கடந்த ஆண்டும் இதே போல் புகையான் பூச்சி தாக்குதலுக்கு 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த நெற்பயிர் சேதமடைந்தது.

    கோயம்புத்தூரில் உள்ள வேளாண்துறை நிபுணர் குழு இங்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குழு அறிக்கை தாக்கல் செய்த விவரம் இதுவரை வெளிவரவில்லை.

    கடந்த ஆண்டு வறட்சி ஏற்பட்ட போது விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து இழப்பீடு பெற ஏக்கர் ஒன்றுக்கு ரூ.356 பிரிமம் தொகை செலுத்தினர். ஆனால், இதுவரை அரசு இழப்பு தொகை வழங்கவில்லை.

    இழப்பீடு தொகை வழங்கவும், புகையான் பூச்சிகள் பரவாமல் தடுக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
    Next Story
    ×