search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    குரூப்-4 தேர்வில் முறைகேடு புகார் - தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

    குரூப்-4 தேர்வில் முறைகேடு புகார் தொடர்பாக தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது.
    சென்னை:

    அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப்-4 பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் சிலருடைய பெயர் தேர்வு முடிவு தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 40 இடங்களை பிடித்து இருந்தனர்.

    இதில் முறைகேடு நடந்து இருப்பதாக மற்ற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணையை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒளிவுமறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படும் நபர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையுடன் இருக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அண்மையில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் இருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவற்றில் ராமேசுவரம், கீழக்கரையில் இருந்து தேர்வானவர்கள் 57 பேர் ஆவார்கள். அவர்களில் 40 பேர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த விண்ணப்பதாரர்கள் ராமேசுவரம் மற்றும் கீழக்கரையை சேர்ந்த வெவ்வேறு மையங்களில் வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே அறையிலிருந்தோ அல்லது ஒரே தேர்வுக்கூடத்திலிருந்தோ தேர்வு செய்யப்படவில்லை.

    இந்த குற்றச்சாட்டு குறித்து மேற்கூறிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள், ஆவணங்கள் மட்டுமின்றி இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து எவ்வித பாரபட்சமுமின்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மைநிலை அறிவிக்கப்படும். இந்த விசாரணையில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி மிகக்கடுமையான குற்றநடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    அதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்தகட்ட புகார் ஒன்றும் எழுந்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான குரூப்-2 ஏ பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவு 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி முடிவு வெளியானது.

    அந்த தரவரிசை பட்டியலிலும் ராமேசுவரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் இடம்பிடித்து இருந்தனர். அதாவது, அந்த தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களில் 30 இடங்களை ராமேசுவரம் பகுதிகளில் இருந்த தேர்வு மையங்களில் எழுதியவர்களாகவே உள்ளதாகவும், இதிலும் சந்தேகம் இருப்பதாகவும் மற்ற தேர்வர்கள் குற்றச்சாட்டை கூறுகின்றனர். இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் ஓராண்டு சம்பளத்தையும் பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×